எழுத்து & இயக்கம்: மீரா கதிரவன்

எழுத்து & இயக்கம்: மீரா கதிரவன்
வயது 18 மாநிறம்

Saturday 20 February 2010

"என் பெயர் வளப்பக்குடி வீரசங்கர்" அவள் பெயர் தமிழரசி பாடகர்




பிறப்பு: 01:05:1957
சொந்த ஊர்: வளப்பக்குடி (தஞ்சாவூர் மாவட்டம்)
படிப்பு: M.A. தமிழ் இலக்கியம்

குடும்பம்: அப்பா வீரமலை கூலி வேலை செய்யிறவர். அம்மா மீனாம்பாள் காய்கறி வியாபாரம் செய்யிறவங்க. மனைவி செல்வி. மூணு பொண்ணுங்க (ஆனந்த வள்ளி, நித்திலவள்ளி,கற்பக வள்ளி).

இத்தனை நாளா எங்கே இருந்தீங்க.. என்ன செஞ்சிகிட்டு இருந்தீங்க..?

நான் முப்பத்தியேழு வருசமா பாடிக்கிட்டுதாங்கையா இருக்கேன். "அவள் பெயர் தமிழரசி" படம் மூலமா உங்க காதுகளுக்கு எட்டியிருக்கு. ரொம்ப சந்தோசங்கையா. என்னுடைய கலை ஆர்வம் அப்பாகிட்ட இருந்துதான் வந்தது. வசந்தகால தொடக்கமான சித்திரை வைகாசில தஞ்சாவூர் மாவட்ட்டதுல கோவில் திருவிழா நடக்கும். அதுக்கு நாடகங்கள் நடத்துவாங்க. அப்பா நாடகங்கள்ல நடிப்பார். நான் முதன் முதல்ல "ஹரிச்சந்திரா"நாடகத்துல லோகிதாசா நடிச்சேன். அப்போ எனக்கு பன்னண்டு வயசு. என்னோட அப்பா சத்தியகீர்த்தியா நடிச்சார். நாடகம் மூணு நாலு நாள் தான் நடக்கும் ஆனா அதுக்கு ஒத்திகை நாலஞ்சு மாசத்துக்கு முன்னாடியே தொடங்கும்.S.L.ராஜமாணிக்கம் பிள்ளைதான் என் முதல் நாடக குரு.

ஆர்வமெல்லாம் கலைத்துறையில இருந்ததால, "வைரம்" நாடகக் கம்பெனி-ல சேர்ந்துட்டேன். அவங்க வள்ளிதிருமணம், ஹரிச்சந்திரா, சர்வதிகாரி, வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகங்கல்லாம் போடுவாங்க. அதுல இசை அமைப்பாளரா இருந்தவர் குடந்தை A.V.கோவிந்தன். வேளாங்கண்ணி கோவில்ல இன்னமும் அவர் பாடிய பாடல்தான் கொடிப் பாடலா ஒலிக்குது. பன்னண்டு வருஷம் அவர் கூடவே இருந்து இசை கத்துக்கிட்டேன். பாடல்கள் எழுதுற திறமையும் வளர்ந்துது.
நான் செய்யாத வேலையில்லங்கையா; கூலி வேலைக்கு கூட போயிருக்கேன். தஞ்சாவூர் மாவட்டம் அதனால வெத்தல கொடிக்கால் வேல செய்தேன். இருந்தாலும் மனசெல்லாம் பாட்டு மேலதான். பாட்டு தான் நம்ம தொழில்னு கல்யாணமான கொஞ்ச நாள்லயே முடிவு பண்ணிட்டேன்."சிவகங்கை கோட்டைசாமி"அவங்களோட சேர்ந்து கச்சேரிகள் பண்ண தொடங்கிட்டேன். தமிழ்நாடு பூரா நாட்டுபுற பாடல் கச்சேரி செஞ்சிருக்கேன். இதுவரைக்கும் ஆறு கேசெட்டு வெளியிட்டிருக்கேன். "மண்ணிசை", "மூங்கில் இலை மேலே", "நீலக்கருங்குயிலே" நாட்டுபுற பாடல் தொகுப்பும், சிவன், ஐயப்பன், அம்மன் பக்திப் பாடல் கேசெட்டுகளும் வெளியிட்டிருக்கேன். எல்லாம் நானே எழுதி இசையமைச்ச பாடல்கள்.

"அவள் பெயர் தமிழரசி" வாய்ப்பு..

"இலக்கியன்"ங்கற இசையமைப்பாளர் மூலமா "அவள் பெயர் தமிழரசி" இயக்குனர் மீரா கதிரவன் அறிமுகம் கிடைச்சுது. சென்னைக்கு வரச்சொல்லி மூணு பாடல்கள கொடுத்து பாடச்சொன்னாங்கையா.

♥ ஆராரோ ஆரிரரோ...
♥ ஒத்தையடி பாதை..
♥ மாடத்துல ஒளி விளக்கா..
இசைஅமைப்பாளர் விஜய் ஆண்டனி எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து பாட வச்சாருங்கையா. இயக்குனரும் பாடல்கள கேட்டுட்டு நான் நெனச்ச மாதிரியே வந்துருக்குன்னு சொன்னருங்கையா. பாடலாசிரியர் ஏகாதசி (ஆராரோ ஆரிரரோ...) பாடல கேட்டுட்டு "என் பாடலுக்கு உயிர் கொடுத்துட்டிங்க"ன்னு ரொம்ப சந்தோசப்பட்டு பாரட்டினாருங்கையா. முதல் படத்துலையே மூன்று பாடல்கள் பாட வாய்ப்பு கிடைச்சது ரொம்ப சந்தோசம்.
இன்னக்கி பாடகனா இருக்கேன். இன்னைக்கும் கலைதான் எனக்கு சோறு போடுது. எல்லார்கிட்ட இருந்தும் பாராட்டு கிடைக்குதுங்கையா. ரொம்ப சந்தோசம். கடைசி வரைக்கும் பாடிகிட்டே இருக்கணும். பட்டி தொட்டியெல்லாம் என் பாட்டு கேட்கணும். அதுதாங்கையா என் ஆசை. தொடர்ந்து வாய்ப்புகள் வருதுங்கையா. இப்போ "வெங்கடேஸ்வரா" படத்துல பாடி இருக்கேன். அடுத்து பெயரிடப்படாத ஒரு படத்துக்கு பாடல் பதிவு நடக்குது. Symphonyநிறுவனத்துக்காக பன்னிரண்டு பாடல்கள் அடங்கிய ஒரு Album பாடி இருக்கேன் இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகும். எல்லாம் அந்த சிவனோட ஆசிர்வாதம்.