எழுத்து & இயக்கம்: மீரா கதிரவன்

எழுத்து & இயக்கம்: மீரா கதிரவன்
வயது 18 மாநிறம்

Tuesday, 16 February 2010

"என் பெயர் ஏகாதசி" அவள் பெயர் தமிழரசி பாடலாசிரியர்

ஏகாதசி
பாடலாசிரியர்


பிறப்பு: 26-12-1975
படிப்பு: B.A., தமிழ் இலக்கியம்
சொந்த ஊர்: பணியான் (மதுரை மாவட்டம்)
இதற்கு முந்தய பணி: திரைப்பட உதவி/இணை இயக்குனர்
பயிற்சிப் படங்கள்/இயக்குனர்கள்:
கிங் (2002) பிரபு சாலமன்
கண்ணும் கண்ணும் (2008) G.மாரிமுத்து
மயிலு (2010) ஜீவன்

குடும்பம்..? அப்பா கழுவத் தேவர்; அம்மா பூவாயி. இருவரும் விவசாய வேலை செய்பவர்கள். வீட்டுக்கு ஒரே பிள்ளை. மனைவி சலோமி. காதல் திருமணம். மகன் கவிராஜன்.

கலை ஆர்வம் எப்படி?

அம்மா பிறந்த வீட்டில்தான் வளர்ந்தேன். அமத்தாவும் (அம்மாவின் அம்மா) சீயானும் (அம்மாவின் அப்பா) தான் என் கற்பனைக்கு விதை போட்டவர்கள். இருவரும் அற்புதமான கதை சொல்லிகள். சீயான் சொல்லும் விக்ரமாதித்தன் கதைகளும், அமத்தா சொல்லும் வாய்மொழி (ராஜா ராணி) கதைகளும் கண்முன்னே காட்சிகளாய் விரியும். அமத்தா சொல்லும் கதைகளுக்கு "உம்ம்ம்.." கொட்டிக்கொண்டே தூங்கிப்போவேன். சீயான் கதை சொல்லிவிட்டு கேள்விகள் கேட்பார். சிந்திக்க வைக்கும் கேள்விகள் அவை.

என் தாய் மாமன்களின் நண்பர்கள்தான் என் நண்பர்கள். என் கடைசி மாமா மத்திய காவல் படையில் சேர்ந்ததும் அவரது நண்பர் சுந்தரபாண்டியனுக்கு நான் தவிர்க்க முடியாத நண்பனாகிவிட்டேன். மிக இளம் வயதில் அவருடன் சேர்ந்து மதுரையில் பார்த்த "கலை இலக்கிய இரவு" உண்மையான கலை, கலைஞர்கள், இலக்கியம், இவற்றை அறிமுகம் செய்தது. அதில் நான் மயங்கிப் போனேன். அவருடன் சேர்ந்து நடனம், சிலம்பம், நாடகம், கையெழுத்து பத்திரிக்கை, என்று பயணித்து. சினிமாவில் சேர சென்னை வந்துவிட்டேன்.

திருப்புமுனை..?

அம்மாவின் கண்ணீருக்கு ஆறுதலாய் இருந்தவை சிவாஜிகணேசன் படங்கள். என்னை இடுப்பில் சுமந்தபடி டென்ட் கொட்டகைகளுக்கு கூட்டிப் போவாள். அவள் அழும்போது நானும் சேர்ந்து அழுவேன். கண்ணீரில் நனைந்த அம்மாவின் சேலை வாசனை இப்போதும் நினைவில் இருக்கிறது. தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு நான் பாடல்கள் எழுதுவேன். அம்மாவின் சேலையை பற்றி ஒரு பாடல் எழுதினேன். அது கலை இலக்கிய ரசிகர்களிடையே பிரபலமானது.

ஆத்தா ஒஞ் சேல - அந்த; ஆகாயத்தைப் போல...
தொட்டி கட்டித் தூங்க; தூளிகட்டி ஆட...
ஆத்துல மீன் பிடிக்க... அப்பனுக்கு தல தொவட்ட...
பாத்தாலே சேத்தணைக்கத் தோணும் - நாங்
செத்தாலும் என்னப் போத்த வேணும்
....................
அக்கா கட்டி பழகினதும்; ஆடு கட்டி மேச்சதுவும்
ஒஞ்சேல தானே; வண்ணப் பூஞ்சோல தானே...
....................
மயிலிறகா ஒஞ்சேல மனசுக்குள்ள விரியும் - ஓங்..
வெளுத்த சேலைத்திரி வெளக்கு போட்டா எரியும்...

இந்த பாடலை கேட்கும் யாரும் கலங்கி விடுவார்கள் அல்லது அழுதுவிடுவார்கள். இந்த பாடல் மதுரை அமெரிக்கன் கல்லூரி, அருளானந்தா கல்லூரி பாடத் திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. எனக்கு நிறைய பாமர ரசிகர்களையும் திரைப்பட வாய்ப்பையும் பெற்றுத்தந்தது.

"அவள் பெயர் தமிழரசி" வாய்ப்பு...?

அலங்காரமான வார்த்தைகள் இல்லாமல் இயல்பான மண்ணின் மணத்தோடு "அவள் பெயர் தமிழரசி" படத்திற்கு பாடல்கள் வேண்டும் என மீரா கதிரவன் நினைத்திருக்கிறார். அப்படி எழுதும் புதியவர்களை தேடியிருக்கிறார். அவரது இணை இயக்குனர் தமிழரசன் மூலமாக மீரா கதிரவனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இயக்குனர் எப்படி வேலை வாங்கினார்..?

முதலில் எனக்கு கொடுக்கப்பட்டது குழந்தைகள் பாடும் பாடலுக்கான சூழல். சினிமாத்தனமில்லாமல் கிராமங்களில் குழந்தைகள் ஆடிப்பாடும் உற்சாகமான பாடலாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் சொன்னார். நான் எழுதிய "குஜு குஜு குஜு குஜு கூட்சு வண்டி.." பாடல் அவருக்கு திருப்தி.

பின்னர் "அவள் பெயர் தமிழரசி" முழு கதையையும் எனக்கு படிக்க கொடுத்தார். கதை என்னுள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இப்படி ஒரு அற்புதமான கதையில் பாடல்கள் எழுத அழைத்திருக்கிறாரே என்ற திருப்தியில் இன்னும் நிறைய உழைத்தேன். ஒவ்வொரு பாடலாக மொத்தம் ஐந்து பாடல் எழுதும் வாய்ப்பை கொடுத்தார்.

♥ குஜு குஜு குஜு குஜு கூட்சு வண்டி...
♥ நீ ஒத்த சொல்லு சொல்லு...
♥ வடக்கா தெற்கா கிழக்கா மேற்கா...
♥ எத்தனையோ கதை உண்டு...
♥ ஆராரோ ஆரிராரோ...

இப்போது உங்கள் மனநிலை...

வெளி உலகிற்கு அதிகம் தெரியாமல் இருந்த எனக்கு மீரா கதிரவன் தன் முதல் படத்திலேயே ஐந்து பாடல்கள் எழுத வாய்ப்பு தந்திருக்கிறார். அவர் என் மீது வைத்த நம்பிக்கையை நான் என்றென்றும் நன்றியோடு நினைத்திருப்பேன். இதை போன்ற கதை சூழல் இதுவரை சொல்லப் படவில்லை. இந்த படம் தமிழ் சினிமாவில் ஒரு நேர்மையான பதிவாக இருக்கும். இதில் நானும் பங்கு கொண்டதை பெருமையாக நினைக்கிறேன்.

நான் எழுதிய ஐந்து பாடல்களும் பாடல் பல்லவி எழுதப்பட்டு பின்னர் மெட்டமைக்கப் பட்டவை. பாடல் சிறப்பாக வரவேண்டும் என எண்ணி நான் நிறைய வரிகள் எழுதி கொடுத்தேன். அதிலிருந்து இயக்குனர் ரசனையோடு சில அழகான வரிகளை தேர்ந்தெடுத்தார். வடக்கா தெற்கா பாடலில் வரும் வரிகள் "அழுத கண்ணீருல அரக்காணி நனைஞ்சிருமே.. உழுது வெதச்சாலும் ஒரு போகம் வெளஞ்சிருமே.." ஒரு நல்ல ரசனை உள்ள இயக்குனரோடு பணிசெய்தது இன்னும் கூடுதல் திருப்தி.

நான் புதியவன் என்று நினைக்காமல் இசைஅமைப்பாளர் விஜய் ஆன்டனி முழு சுதந்திரம் கொடுத்து பாடல்கள் எழுத சொன்னார். நல்ல பொருத்தமான குரல்களை தேர்ந்தெடுத்து பாட வைத்திருக்கிறார். பாடல்கள் எல்லாம் பிரபலம் அடைந்திருப்பது மகிழ்ச்சி. என்னை ஆதரிக்கும் சொந்த ஊர் நண்பர்கள் துளசி, விஜி, என்னுள் கலை ஆர்வத்தை வளர்த்த சுந்தரபாண்டியன், இயக்குனரிடம் அறிமுகம் செய்த தமிழரசன் இவர்களை நன்றியோடு நினைக்கிறேன்.

உங்கள் பேச்சில் நல்ல பக்குவம் தெரிகிறதே...

வளர்ந்த வறுமையான சூழல், சொந்த ஊரில் பார்த்து பழகிய சக மனிதர்களின் கடின உழைப்பு, வறுமை, வாசித்தல் பழக்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க பணிகள், வீதி நாடகங்கள், சினிமா உதவி இயக்குனர் பணி, இவை காரணமாக இருக்கலாம்.

இப்போ என்ன செய்றீங்க..?

திட்டக்குடி, ஆடுகளம், மயிலு படங்களில் பாடல்கள் எழுதி இருக்கிறேன். இன்னும் பெயரிடப்படாத சில படங்களுக்கும் எழுதி வருகிறேன். திரைப்படம் இயக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.

வாழ்த்துகள்

"என் பெயர் தனஞ்சயன்" அவள் பெயர் தமிழரசி தயாரிப்பாளர்

"என் பெயர் தனஞ்சயன்"
அவள் பெயர் தமிழரசி தயாரிப்பாளர்
பிறப்பு: May 14
படிப்பு: MBA (Marketing, Human Relations, IT)
பணி: Moser Baer நிறுவனத்தில் தலைமை நிர்வாகம்
அங்கீகாரம்/விருதுகள்:
மக்கள் தொலைக்காட்சி விருது: சிறந்த படம் "பூ" 2008
தமிழக அரசு மாநில திரைப்பட விருது: பெண்களை உயர்வாக சித்தரிக்கும் படம் "பூ" (2008)
Jaya TV விருது: சிறந்த புதுமுக தயாரிப்பாளர் "பூ" 2008


குடும்பம்...
அம்மா ஜகதம்மாள், அப்பா கோவிந்த். மனைவி லலிதா, இரண்டு மகள்கள் ரேவதி ஹரிதா. அப்பாவுக்கு சினிமாவில் ஆர்வமில்லை. அம்மா சினிமா ப்ரியை என் சிறு வயது முதலே நிறைய தமிழ் தெலுங்கு சினிமா (வாரத்திற்கு இரண்டு) கூட்டிப்போவார். "ஒருவன் தனக்கு விருப்பமுள்ளதை மட்டுமே செய்யவேண்டும்" என்ற தத்துவத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. என் விருப்பங்களுக்கும் லட்சியத்திற்கும் பக்க பலமாக இருப்பது என் மனைவி.

லட்சியம்...
நான் சம்பந்தப் பட்ட துறையில் ஒரு சிறந்த நிர்வாகியாகவும் முன்னோடியாக இருக்க விரும்புகிறேன். எதிர்காலத்தில் பெரிய நடிகர்களை வைத்து தரமான பொழுதுபோக்கு படங்களை தயாரிக்க விருப்பம். தமிழ் திரைப்படங்களை இயக்கவும் விரும்புகிறேன்.

"Moser Baer என்றால் தரமான படங்கள்..." எப்படி சாத்தியமாயிற்று?

குடும்பத்துடன் பார்க்ககூடிய படங்களை மட்டுமே தயாரிப்பது என்பதில் உறுதியாக இருக்கிறேன். இந்த ஒரு அளவுகோல் தரமான கதைகளை தேர்ந்தெடுக்க உதவுகிறது. சிறுவயது முதலே நிறைய கனவுகளோடும் சிந்தனைகளோடும் வளர்ந்தேன். நிறைய படிப்பதும் நல்ல படங்களை விரும்பி பார்ப்பதும் என்னை நல்ல படைப்பாற்றல் உள்ளவனாக வைத்திருக்கின்றன. கற்றுக்கொள்ளும் ஆர்வமுள்ள யாரும் படைப்பாளி ஆகலாம். Ego இல்லாமல் சக தொழிலாளர்களுடன் வெளிப்படையாக பழகுவது, விமர்சனங்களை பக்குவமாக ஏற்றுக்கொள்வது இவையும் என் பலங்கள். முன்பை விட இப்போது திரைப்படத் துறை கட்டமைப்பு, இயங்கும் முறை பற்றி நிறைய தெரிந்து கொண்டுள்ளேன். தொடர்ந்து தரமான படங்களை மட்டுமே நீங்கள் எதிர்பார்க்கலாம்.

"அவள் பெயர் தமிழரசி" தயாரிக்க காரணம்?

கதையை படித்தவுடன் மிகவும் பிடித்துவிட்டது. உடனே மீரா கதிரவனை அழைத்துப் பேசினேன். அவர் "அவள் பெயர் தமிழரசி" படத்தை குறும் படமாக இயக்கி கொண்டு வந்திருந்தது அவரது மனத் தெளிவையும் பொறுப்புணர்ச்சியையும் சொன்னது. இதே போல் படத்தை எடுத்துவிடுவார் என்ற நம்பிக்கையை கொடுத்தது. இந்த படத்தின் backdrop இதுவரை சொல்லப் படாதது. மிகவும் புதிய கதைக்களம்."அவள் பெயர் தமிழரசி" படக் குழுவினர்?

இயக்குனர் மீரா கதிரவன் மிகவும் பொறுப்புணர்ச்சியும் , சினிமாவின் மீது தீராத காதலும், திறமையும் கொண்டவர். அவருக்கென்று தமிழ் சினிமாவில் ஒரு இடம் நிச்சயம் உண்டு. விஜய் ஆண்டனியும் மீரா கதிரவனும் இணைந்து தரமான பாடல்களை கொடுத்துள்ளனர். பாடல்கள் ஏற்கனவே பிரபலமடைந்துள்ளன. ஒளிப்பதிவாளர் முத்தையாவும் எடிட்டர் ராஜா முகமதுவும் மிகுந்த ஈடுபாட்டுடன் உழைத்துள்ளனர். இந்த கதைப்படி கதாநாயகனின் உடலமைப்பில் மூன்றுக்கும் மேற்பட்ட உருவ மாற்றம் தேவைப்பட்டது. அதனால் நிறைய மாதங்கள் காத்திருந்து நேரம் செலவிட்டு எடுக்க வேண்டி இருந்தது. (கிட்டதட்ட ஐந்து ஷெட்யூல்) வெயில் மழை என்று காத்திருந்து படப்பிடிப்பு நடத்தினோம். படக் குழுவினர் அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடனும் அர்ப்பணிப்புடனும் வேலை செய்தனர்.


முழுமையாக படம் பார்த்தபோது எப்படி உணர்ந்தீர்கள்?

படத் தயாரிப்பில் நிறைய சவால்கள் கஷ்டங்கள். எல்லா கஷ்டங்களும் படத்தை முழுமையாக பார்த்த போது சந்தோசமாக மாறிவிட்டது. படம் மிகவும் அருமையாக வந்திருக்கிறது. சினிமாத்தனம் துளியும் இல்லாத, கிராம வாழ்வை இயல்பாக சொல்லும் யதார்த்தமான படம். It is a bold attempt by the Director. I am hopeful and confident that the audience would love it. படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் படம் நிச்சயம் பிடிக்கும்.

"என் பெயர் மூர்த்தி" அவள் பெயர் தமிழரசி கலை இயக்குனர்

என் பெயர் மூர்த்தி
கலை இயக்குனர் (அவள் பெயர் தமிழரசி)


பிறப்பு: 14-04-1981
படிப்பு : Bachelor of Fine Arts (Painting 1999-2003)அரசு கவின் கல்லூரி சென்னை
பயிற்சி படங்கள் : Asst Art Director வசூல்ராஜா MBBS, அட்டகாசம், தொட்டி ஜெயா, வெயில், டிஷ்யூம், வாழ்த்துகள், பூ
கற்றுக்கொடுத்தவர்கள்: திரு.மோகன மகேந்திரன் & திரு.வீர சமர்

குடும்பம்..?
அப்பா: சுப்பராயன்; அம்மா: செல்வாம்பாள். அவங்களுக்கு சினிமா பற்றி எல்லாம் எதுவும் தெரியாது. அப்பா அடிக்கடி வேற எதாவது நல்ல சம்பாத்தியம் உள்ள வேலைக்கு போயிருக்கலாமேம்பார். பையன் என்ன பண்றான்னு யாரவது கேட்டா அப்பா "அவன் படம் போடறவன்" ன்னு சொல்வார். அம்மா, "பையன் ஆர்ட் டைரக்டர்"-ன்னு சொல்லுவாங்க. என் நன்றிக்குரியவர்கள் என் அண்ணா அண்ணி. அண்ணா செல்வராஜ் மின்வாரியத்துல வேலை செய்யிறார்.

அவள் பெயர் தமிழரசி வாய்ப்பு..? 
இதற்கு முன் பூ படத்தில் உதவி கலை இயக்குனராக வேலை செய்தது "அவள் பெயர் தமிழரசி" இயக்குனர் மீரா கதிரவனை சந்திக்க உதவியது. என் முதல் படம் எப்படி அமைய வேண்டும் என்று நினைத்தேனோ அதே போல் "அவள் பெயர் தமிழரசி" அமைந்தது.


படத்தில் சவாலாக அமைந்த சூழல்கள்?
இதற்கு முன் நான் பயிற்சியாளராக பணியாற்றிய மோகன மகேந்திரனும் வீரசமர் அண்ணாவும் எப்படிப்பட்ட சவாலான சூழலாக இருந்தாலும் கலை இயக்கம் செய்ய என்னை தயார் செய்து இருந்தனர். இயக்குனர் மீரா கதிரவன் என்னிடம் அன்பாகத்தான் வேலை வாங்கினார். நான் அவரை அண்ணா என்று தான் கூப்பிடுவேன். அவரிடம் அதிகம் திட்டு வாங்கவில்லை. (அப்போ திட்டு வாங்கி இருக்கீங்க... :-)

முதல் விமானப் பயணம்?
நன்றாக இருந்தது. சென்னையில் இருந்து பூனா போனோம். நான், ஒளிப்பதிவாளர் P.G.முத்தையா, இயக்குனர் மீரா கதிரவன். உண்மையில் நான் விமானப் பயணத்தை அனுபவிக்கவில்லை. பூனா சென்று இறங்கியதும் செய்யவேண்டிய திரைப்பட பணிகள் தான் மனதில் ஓடியது.

லட்சியம்?
என் மானசீக குரு கலை இயக்குனர் சாபு சிரில் அவர்களிடம் பாராட்டு பெற வேண்டும். காரணம்..? எனக்கு மிகவும் பிடித்தவர். நம்மை விட நம் தொழிலில் உயர்ந்தவர் பாராட்டினால் ஒரு பொறுப்பு வரும் அதான். என் வெகு நாள் ஆசை ஒரு நூறு பேருக்கு ஒரு வேளை சோறு போட வேண்டும்.

வாழ்த்துகள்

இயக்குனர் "மீரா கதிரவன்" பேட்டி

இயக்குனர் "மீரா கதிரவன்" பேட்டி

நன்றி: "விளம்பரம்" இதழ் (கனடா) Dec 15, 2009
நேர்காணல்: பாலு சத்யா

குறிப்பு: ஒவ்வொரு வண்ணத்தையும் தனித்தனியாக Click செய்து படிக்கவும்.. :-)

ஆண்கள் அழுவதில்லை


ஓர் ஆணுக்கு மிகப்பெரிய துக்கம் ஒன்று நேரும்போது, சமூக கோட்பாடுகளுக்கு பழக்கப்பட்டு வெளிப்படையாக அவன் அழாமல் இருக்கலாம். அவன் மனம் அழுவதை யார் சொல்லுவார்கள்?

(அழுது துக்கத்தை கரைப்பது மன நலனிற்கு நல்லது என்று உளவியல் சொல்கிறது)

பகிர்ந்துகொள்ளப்படும்போது துக்கம் பாதியாகக் குறைகிறது. யாருமே இல்லாத ஒருவன் இடிந்து போனால் அவன் துக்கத்தை எப்படி சொல்வான் யாரிடம் சொல்வான்? சாய்ந்துகொள்ள ஒரு தோள் தேடும், கதறி அழ ஒரு மடி தேடும் ஒருவனின் குரல் எப்படி இருக்கும்? ஆயிரம் கத்திகளைக் கொண்டு இதயத்தை கூறுபோட்டு கிழித்தெறியும் அந்த சொல்லமுடியாத துக்கம் குரலாக வெளிப்பட்டால் எப்படி இருக்கும்?

சொல்லி அழுதால் தீரும் சோகம் உண்டு; சொல்லி அழுதாலும் தீராத சோகத்தை, சொல்லி அழ முடியாத துக்கத்தை எப்படி இறக்கி வைப்பது?

சொல்லமுடியாத அந்த துக்க மன நிலையை பிரதிபலிப்பதாய் ஒரு குரல் அசரீரியாய் (தாலாட்டாக) ஒலித்தால் எப்படி இருக்கும்?

இப்படித்தான் இருக்கும்...

http://www.youtube.com/watch?v=riPopVCeftQ&feature=related

படம்: அவள் பெயர் தமிழரசி
பாடல்: ஏகாதசி
குரல்: வளப்பைகுடி வீரசங்கர்
இசை: விஜய் ஆண்டனி

ஆராரோ ஆரிராரோ என் கண்ணே ஆரிராரோ ஆராரோ
ஏ.. வெய்யிலடையும் பனங்காடு மழையடையும் குத்தாலம்
நாமடையும் கூட்டுக்குத்தான் என் கண்ணே நல்ல சேதி எக்காலம்..?
என் கண்ணே நல்ல சேதி எக்காலம்?
மாசத்துல ஒரு நாளு.. என் கண்ணே
மாசத்துல ஒரு நாளு.. சந்திரரும் தூங்குவாக
ஓங்.. தூக்கம் பாக்கத்தானே என் கண்ணே
சூரியரும் ஏங்குவாக...
ஓங்.. தூக்கம் பாக்கத்தானே என் கண்ணே நவமணியே
சூரியரும் ஏங்குவாக...
நீ மல்லாந்து தூங்கும் அழக..
என் கண்ணே... மரக்கா போட்டு அளக்கணுமே
என் கண்ணே நீ குப்புறக்கா தூங்கும் அழக கூட (கூடை)போட்டு அளக்கணுமே
குப்புறக்கா தூங்கும் அழக என் கண்ணே கூட போட்டு அளக்கணுமே


உன்ன தூங்க விட்டு நான் ஓடுவேண்டி கழநிக்குதான் அடி
உன்ன தூங்க விட்டு நான் ஓடுவேண்டி கழநிக்குதான்
ஓங் நெனப்பில் விரலறுப்பேன் அடி ஆத்தே நான் எங்கே கருதறுப்பேன்
ஓங் நெனப்பில் விரலறுப்பேன் அடி ஆத்தே நான் எங்கே கருதறுப்பேன்
பிறந்தது ஒரு சீமே.. என் கண்ணே வளர்ந்தது ஒரு சீமே
நம்ம வயித்த கழுவத்தான் என் கண்ணே வாழுறது ஒரு சீமே
நம்ம வயித்த கழுவத்தான் என் கண்ணே வாழுறது ஒரு சீமே


சீட்டெடுக்கும் சின்ன கிளி ஏங் சீதக்கி (சீதை) என்ன சொல்லும் அந்த
சீட்டெடுக்கும் சின்ன கிளி ஏங் சீதக்கி என்ன சொல்லும்
பாட்டெடுக்கும் குயிலு ஒன்னு நல்லதொரு பதிலுதான் சொல்ல வேணும்
பாட்டெடுக்கும் குயிலு ஒன்னு நல்லதொரு பதிலுதான் சொல்ல வேணும்


உங் கையிரண்ட மோந்து பார்த்தா கற்பூர வாசம் வரும்.
உன் கையிரண்ட மோர்ந்து பார்த்தா கற்பூர வாசம் வரும்
என் கண்ணே நவமணியே
உன் பாதம் தொட்ட மண்ணு
பொன்னாக பூத்து வரும் என் கண்ணே
உன் பாதம் தொட்ட மண்ணு என் கண்ணே
பொன்னாக தொலங்கி வரும்
ஆராரோ ஆரிராரோ... என் கண்ணே... ஆரிராரோ ஆராரோ...


தாலாட்டுப் பாடல்கள் சோகத்தின் வடிகால் எனினும், ஆண் குரலில் இப்படி ஒரு உருக்கமான தாலாட்டுப் பாடலை கேட்பது புதிய அனுபவம். அவ்வளவு எளிதாக இந்த குரலை விட்டும் வரிகளை விட்டும் விலகி வந்துவிட முடியாது.

குரலுக்கு எத்தனையோ அடைமொழிகள் (இனிமையான குரல், வளமான குரல், கணீர் குரல்) இருந்தாலும், "Haunting Voice" என்று ஒரு Adjective உண்டு. இந்த பாடலுக்கு சொந்தக்காரரின் குரல் அப்படிப்பட்ட துரத்தும் குரல்.

இந்த பாடலை ஒரு முறை கேளுங்கள். இந்த Solitary குரலையும் அடிவயிற்றிலிருந்து பிசைந்தெழும் துக்கத்தையும் விட்டு அகல முடியாது. ஒரு முறை கேட்டாலே வேறு வேலை செய்ய முடியாது. It will follow you in all possible means, right from the first listening.

தாள வாத்திய இசை எதுவும் சேர்க்கப்படாத இந்த பாடல் சுகமான சோகம்.

படம்: அவள் பெயர் தமிழரசி
பாடல்: ஏகாதசி
குரல்: வளப்பைகுடி வீரசங்கர்
இசை: விஜய் ஆண்டனி

http://www.youtube.com/user/lap845#p/a/u/1/6gJsAp34OBw

ஏலேலே... ஏலேலே ஏலோ..!!
ஏலேலே... ஏலேலே ஏலோ..!!
ஏலேலே... ஏலேலே ஏலோ..!!
ஏலேலே... ஏலேலே ஏலோ..!!
ஏலேலே... ஏலேலே ஏலோ..!!
ஏலேலே... ஏலேலே ஏலோ..!!
ஏலேலோ ஏலேலே ஏலோ..!!


மாடத்துல ஓளிவிளக்காம் மச்சிவீட்டு சாணிதர
மாடத்துல ஓளிவிளக்காம் மச்சிவீட்டு சாணிதர
அங்கே கூடி வாழ் நீ இல்லம நான் குத்தவசேன் பரணி மேலே
அங்கே கூடி வாழ் நீ இல்லம நான் குத்தவசேன் பரணி மேலே


மகராசி போனாலும் மஞ்சள் வாசம் போகலியே
மகராசி போனாலும் மஞ்சள் வாசம் போகலியே
நெசமாத்தான் அரசிட்டியா நாம ரெண்டு பேர்க்கும் அரளிவெதே
நெசமாத்தான் அரசிட்டியா நாம ரெண்டு பேர்க்கும் அரளிவெதே


மல்லியப்பூ சிரிப்பாலே ஏங் மனச கூறு போட்டியேடி
மல்லியப்பூ சிரிப்பாலே ஏங் மனச கூறு போட்டியேடி
கள்ளம் கபடம் பேசி ஏங் கல் நெஞ்ச கரச்சியேடி
கள்ளம் கபடம் பேசி ஏங் கல் நெஞ்ச கரச்சியேடி
ஏங் கல் நெஞ்ச கரச்சியேடி


உள்ளம் பதறுதடி எண்ணம் சிதருதடி
உள்ளம் பதறுதடி எண்ணம் சிதருதடி
எண்ணம் சிதருதடி
உண்மை காதலுக்கு மனம் ஏங்கி
உண்மை காதலுக்கு மனம் ஏங்கி
கசுஞ்சு உருகுதடி


மனசு கசுஞ்சு உருகுதடி
மனசு கசுஞ்சு உருகுதடி
மனசு கசுஞ்சு உருகுதடி

"அவள் பெயர் தமிழரசி இசை வெளியீட்டு விழா

"அவள் பெயர் தமிழரசி" விழா இனிதே நடந்தது

"அவள் பெயர் தமிழரசி" திரைப்பட இசை/முன்னோட்ட வெளியீட்டு விழா


விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.

தயாரிப்பாளர் தனஞ்சயன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

* முதலில் படத்திலிருந்து பாடல்கள் திரையிடப்பட்டன.

நீ ஒத்த சொல்லு சொல்லு...
குஜு குஜு கூட்சு வண்டி
வடக்கா..தெக்கா

* பின்னர் முன்னோட்டம் திரையிடப்பட்டது

பாலுமகேந்திரா வாழ்த்துரை

"இயக்குனர் இலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவன். என்னை மாதம் ஒரு முறையேனும் சந்தித்து தன் சினிமா ரசனையையும், வாசிப்பையும் பகிர்ந்துகொள்வான்.

நல்ல சினிமா வாழ்க்கைப் பதிவிலிருந்து எடுக்கப்படவேண்டும். இவன் காதலின் அழகியலை மட்டும் திரையில் பதிவு செய்ய மாட்டான். மனித உணர்வுகளையும் பதிவு செய்வான். எதிர்காலத்தில் சாதனை இயக்குனர்களின் மத்தியில் இவனும் வீற்றிருப்பான்.

இந்த படத்தின் கதையை என்னிடம் சொன்னான். திரைக்கதையாக்கச்சொன்னேன். பிறகொருநாள் படத்தை ஒரு குறும்படமாக எடுத்து வந்து என்னை ஆச்சரியப் படுத்தினான். அதன் தரத்தில் நான் மயங்கிப் போனேன்.

அந்த குறும்படத்தில் நடித்த பெண்ணையும் ஒளிப்பதிவாளரையும் இதை திரைப்படமாக எடுக்கும்போதும் பயன்படுத்த வேண்டும் என்று சொன்னேன். இன்றைக்கு பார்த்தால் அவர்கள் இருவரும் இந்த படத்தில் இருக்கிறார்கள் மகிழ்ச்சி".


இயக்குனர் மகேந்திரன்: "இந்த படத்தின் பாடல்களைப் பார்க்கும்போது தி.ஜா, கி.ரா வின் நாவல்களில் வரும் ஏதோ ஒரு கிராமத்தைப் பார்த்த நிறைவு ஏற்ப்படுகிறது.

நான் பொது மேடைகளில் அதிகம் காணப்படுவதில்லை என்று எல்லோரும் சொல்கிறார்கள். நான் உங்கள் எல்லோரையும் தூரத்தில் இருந்துகொண்டே ரசிக்கிறேன், நேசிக்கிறேன். உங்கள் எல்லோரையும் எனக்குப் பிடிக்கும். அருகில் இருந்து கொண்டே மனத்தால் விலகி இருப்பதை விட, தூரத்தில் இருந்து மனத்தால் நெருங்கி இருப்பது நல்லதுதானே..?

நடிகர் பார்த்திபன்: உதவி இயக்குனர்களின் பெயரை அழைப்பிதழில் போட்ட முதல் திரைப்படம் இதுதான்.

இயக்குனர் தங்கர் பச்சான்: ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு திரைக்கதை முக்கியம். முழு படத்தின் திரைக்கதையும் தீர்மானிக்கப்பட்ட பின்னர் திரைப்படம் தொடங்கப் படுமானால் நல்ல தரமான படங்கள் கிடைக்கும்.


பாலு மகேந்திரா திரைப்பட இசை ஒலிப் பேழையை வெளியிட ஸக்சேனா பெற்றுக் கொண்டார்.இயக்குனர்கள் அமீர், சசிகுமார், வசந்த், மிஷ்கின், விநியோகஸ்தர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், , நடிகர் பரத், உள்ளிட்டோர் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

படக்குழுவினர் இசையமைப்பளர் விஜய் ஆண்டனி, இயக்குனர் மீராகதிரவன், நடிகர் ஜெய், அறிமுக நடிகை நந்தகி, படத்தின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

தயாரிப்பாளர் லலிதா நன்றி கூறினார்