ஏகாதசி
பாடலாசிரியர்
பிறப்பு: 26-12-1975
படிப்பு: B.A., தமிழ் இலக்கியம்
சொந்த ஊர்: பணியான் (மதுரை மாவட்டம்)
இதற்கு முந்தய பணி: திரைப்பட உதவி/இணை இயக்குனர்
பயிற்சிப் படங்கள்/இயக்குனர்கள்:
கிங் (2002) பிரபு சாலமன்
கண்ணும் கண்ணும் (2008) G.மாரிமுத்து
மயிலு (2010) ஜீவன்
குடும்பம்..? அப்பா கழுவத் தேவர்; அம்மா பூவாயி. இருவரும் விவசாய வேலை செய்பவர்கள். வீட்டுக்கு ஒரே பிள்ளை. மனைவி சலோமி. காதல் திருமணம். மகன் கவிராஜன்.
கலை ஆர்வம் எப்படி?
அம்மா பிறந்த வீட்டில்தான் வளர்ந்தேன். அமத்தாவும் (அம்மாவின் அம்மா) சீயானும் (அம்மாவின் அப்பா) தான் என் கற்பனைக்கு விதை போட்டவர்கள். இருவரும் அற்புதமான கதை சொல்லிகள். சீயான் சொல்லும் விக்ரமாதித்தன் கதைகளும், அமத்தா சொல்லும் வாய்மொழி (ராஜா ராணி) கதைகளும் கண்முன்னே காட்சிகளாய் விரியும். அமத்தா சொல்லும் கதைகளுக்கு "உம்ம்ம்.." கொட்டிக்கொண்டே தூங்கிப்போவேன். சீயான் கதை சொல்லிவிட்டு கேள்விகள் கேட்பார். சிந்திக்க வைக்கும் கேள்விகள் அவை.
என் தாய் மாமன்களின் நண்பர்கள்தான் என் நண்பர்கள். என் கடைசி மாமா மத்திய காவல் படையில் சேர்ந்ததும் அவரது நண்பர் சுந்தரபாண்டியனுக்கு நான் தவிர்க்க முடியாத நண்பனாகிவிட்டேன். மிக இளம் வயதில் அவருடன் சேர்ந்து மதுரையில் பார்த்த "கலை இலக்கிய இரவு" உண்மையான கலை, கலைஞர்கள், இலக்கியம், இவற்றை அறிமுகம் செய்தது. அதில் நான் மயங்கிப் போனேன். அவருடன் சேர்ந்து நடனம், சிலம்பம், நாடகம், கையெழுத்து பத்திரிக்கை, என்று பயணித்து. சினிமாவில் சேர சென்னை வந்துவிட்டேன்.
திருப்புமுனை..?
அம்மாவின் கண்ணீருக்கு ஆறுதலாய் இருந்தவை சிவாஜிகணேசன் படங்கள். என்னை இடுப்பில் சுமந்தபடி டென்ட் கொட்டகைகளுக்கு கூட்டிப் போவாள். அவள் அழும்போது நானும் சேர்ந்து அழுவேன். கண்ணீரில் நனைந்த அம்மாவின் சேலை வாசனை இப்போதும் நினைவில் இருக்கிறது. தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு நான் பாடல்கள் எழுதுவேன். அம்மாவின் சேலையை பற்றி ஒரு பாடல் எழுதினேன். அது கலை இலக்கிய ரசிகர்களிடையே பிரபலமானது.
ஆத்தா ஒஞ் சேல - அந்த; ஆகாயத்தைப் போல...
தொட்டி கட்டித் தூங்க; தூளிகட்டி ஆட...
ஆத்துல மீன் பிடிக்க... அப்பனுக்கு தல தொவட்ட...
பாத்தாலே சேத்தணைக்கத் தோணும் - நாங்
செத்தாலும் என்னப் போத்த வேணும்
....................
அக்கா கட்டி பழகினதும்; ஆடு கட்டி மேச்சதுவும்
ஒஞ்சேல தானே; வண்ணப் பூஞ்சோல தானே...
....................
மயிலிறகா ஒஞ்சேல மனசுக்குள்ள விரியும் - ஓங்..
வெளுத்த சேலைத்திரி வெளக்கு போட்டா எரியும்...
இந்த பாடலை கேட்கும் யாரும் கலங்கி விடுவார்கள் அல்லது அழுதுவிடுவார்கள். இந்த பாடல் மதுரை அமெரிக்கன் கல்லூரி, அருளானந்தா கல்லூரி பாடத் திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. எனக்கு நிறைய பாமர ரசிகர்களையும் திரைப்பட வாய்ப்பையும் பெற்றுத்தந்தது.
"அவள் பெயர் தமிழரசி" வாய்ப்பு...?
அலங்காரமான வார்த்தைகள் இல்லாமல் இயல்பான மண்ணின் மணத்தோடு "அவள் பெயர் தமிழரசி" படத்திற்கு பாடல்கள் வேண்டும் என மீரா கதிரவன் நினைத்திருக்கிறார். அப்படி எழுதும் புதியவர்களை தேடியிருக்கிறார். அவரது இணை இயக்குனர் தமிழரசன் மூலமாக மீரா கதிரவனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இயக்குனர் எப்படி வேலை வாங்கினார்..?
முதலில் எனக்கு கொடுக்கப்பட்டது குழந்தைகள் பாடும் பாடலுக்கான சூழல். சினிமாத்தனமில்லாமல் கிராமங்களில் குழந்தைகள் ஆடிப்பாடும் உற்சாகமான பாடலாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் சொன்னார். நான் எழுதிய "குஜு குஜு குஜு குஜு கூட்சு வண்டி.." பாடல் அவருக்கு திருப்தி.
பின்னர் "அவள் பெயர் தமிழரசி" முழு கதையையும் எனக்கு படிக்க கொடுத்தார். கதை என்னுள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இப்படி ஒரு அற்புதமான கதையில் பாடல்கள் எழுத அழைத்திருக்கிறாரே என்ற திருப்தியில் இன்னும் நிறைய உழைத்தேன். ஒவ்வொரு பாடலாக மொத்தம் ஐந்து பாடல் எழுதும் வாய்ப்பை கொடுத்தார்.
♥ குஜு குஜு குஜு குஜு கூட்சு வண்டி...
♥ நீ ஒத்த சொல்லு சொல்லு...
♥ வடக்கா தெற்கா கிழக்கா மேற்கா...
♥ எத்தனையோ கதை உண்டு...
♥ ஆராரோ ஆரிராரோ...
இப்போது உங்கள் மனநிலை...
வெளி உலகிற்கு அதிகம் தெரியாமல் இருந்த எனக்கு மீரா கதிரவன் தன் முதல் படத்திலேயே ஐந்து பாடல்கள் எழுத வாய்ப்பு தந்திருக்கிறார். அவர் என் மீது வைத்த நம்பிக்கையை நான் என்றென்றும் நன்றியோடு நினைத்திருப்பேன். இதை போன்ற கதை சூழல் இதுவரை சொல்லப் படவில்லை. இந்த படம் தமிழ் சினிமாவில் ஒரு நேர்மையான பதிவாக இருக்கும். இதில் நானும் பங்கு கொண்டதை பெருமையாக நினைக்கிறேன்.
நான் எழுதிய ஐந்து பாடல்களும் பாடல் பல்லவி எழுதப்பட்டு பின்னர் மெட்டமைக்கப் பட்டவை. பாடல் சிறப்பாக வரவேண்டும் என எண்ணி நான் நிறைய வரிகள் எழுதி கொடுத்தேன். அதிலிருந்து இயக்குனர் ரசனையோடு சில அழகான வரிகளை தேர்ந்தெடுத்தார். வடக்கா தெற்கா பாடலில் வரும் வரிகள் "அழுத கண்ணீருல அரக்காணி நனைஞ்சிருமே.. உழுது வெதச்சாலும் ஒரு போகம் வெளஞ்சிருமே.." ஒரு நல்ல ரசனை உள்ள இயக்குனரோடு பணிசெய்தது இன்னும் கூடுதல் திருப்தி.
நான் புதியவன் என்று நினைக்காமல் இசைஅமைப்பாளர் விஜய் ஆன்டனி முழு சுதந்திரம் கொடுத்து பாடல்கள் எழுத சொன்னார். நல்ல பொருத்தமான குரல்களை தேர்ந்தெடுத்து பாட வைத்திருக்கிறார். பாடல்கள் எல்லாம் பிரபலம் அடைந்திருப்பது மகிழ்ச்சி. என்னை ஆதரிக்கும் சொந்த ஊர் நண்பர்கள் துளசி, விஜி, என்னுள் கலை ஆர்வத்தை வளர்த்த சுந்தரபாண்டியன், இயக்குனரிடம் அறிமுகம் செய்த தமிழரசன் இவர்களை நன்றியோடு நினைக்கிறேன்.
உங்கள் பேச்சில் நல்ல பக்குவம் தெரிகிறதே...
வளர்ந்த வறுமையான சூழல், சொந்த ஊரில் பார்த்து பழகிய சக மனிதர்களின் கடின உழைப்பு, வறுமை, வாசித்தல் பழக்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க பணிகள், வீதி நாடகங்கள், சினிமா உதவி இயக்குனர் பணி, இவை காரணமாக இருக்கலாம்.
இப்போ என்ன செய்றீங்க..?
திட்டக்குடி, ஆடுகளம், மயிலு படங்களில் பாடல்கள் எழுதி இருக்கிறேன். இன்னும் பெயரிடப்படாத சில படங்களுக்கும் எழுதி வருகிறேன். திரைப்படம் இயக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.
வாழ்த்துகள்
Subscribe to:
Post Comments (Atom)
தம்பி ஏகாதசி அற்புதமான கலைஞர். அவருடைய கடின உழைப்பை கண்முன் கண்டவன். கடின உழைப்புக்கு பலன் என்றும் உண்டு. தொடர்ந்து கலைதுறையில் சாதனை செய்ய என் வாழ்த்துக்கள். அன்புடன்
ReplyDeleteமொ.பாண்டியராஜன். மதுரை.