பிறப்பு: 10:04:1947
சொந்த ஊர்: திருநாகேஸ்வரம் (கும்பகோணம்)
படிப்பு: ஓவியக் கல்லுரி (1966-1972)
பட்டயப்படிப்பு (Painting)
பட்டயமேற்படிப்பு (Textile)
மொத்தம் ஆறு ஆண்டுகள்
அங்கீகாரங்கள்/விருதுகள்: Masters Craftsman தேசிய விருது
(குடியரசுத்தலைவர் வெங்கட்ராமன்)
சித்ரகலா விருது
குடும்பம்: அம்மா: பொன்னம்மாள்: அப்பா: வீரமுத்து. தங்கை: சந்திரா. மனைவி: சாந்தி, இல்லத்தரசி. (காதல் திருமணம்) கலப்புத் திருமணம். இரண்டு மகள்கள். சங்கீதா, சரிகா. மருமகன்கள்தான் என் மகன்கள். அவர்கள் நிறைய படித்து, நல்ல பதவி, வசதியோடு வெளிநாடுகளில் வாழ்கின்றனர். எனினும் ஒரு எளிமையான சமூகப்போராளியான என்னை அப்படியே ஏற்றுக் கொண்டனர்.
இதுவரை நீங்கள்...
கலை இலக்கிய நண்பர்களுக்கு மரபு சார்ந்த ஓவியர். எதிர்பாராத இனிய நிகழ்வாக பாலு மகேந்திராவின் "சந்தியாராகம்" (1989) படத்தில் கதை நாயகன் (சொக்கலிங்க பாகவதரின் மகன்/அர்ச்சனாவின் கணவன் வேடம்). நான் மத்திய அரசு பணியில் (மத்திய நெசவாளர் சேவை மையம். Weavers Service Center Gov of India) நாடு முழுவதும் பதினாறு ஆண்டுகள் வேலை செய்திருக்கிறேன். நிறைவான பணி. என் பணியை பாராட்டி தேசியவிருது கூட கொடுத்தார்கள். எனினும், ஒரு கட்டத்தில் விருப்ப ஓய்வு. நிறைய Mural ஓவியங்கள் தமிழ்நாடு முழுவதும் செய்திருக்கிறேன். மற்ற ஓவியர்களைப் போலவே தனி ஆளாகவும் குழுவாகவும் நிறைய ஓவிய கண்காட்சிகளும் நடத்தியிருக்கிறேன். ஓவியம் தொடர்பாக சில வெளிநாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறேன். தொடர்ச்சியாக நம் மரபுசார்ந்த ஓவியங்களை வரைகிறேன். அதற்காக நாடு முழுவதும் சுற்றி நிறைய ஆராய்ச்சிகள் செய்திருக்கிறேன். இது நான் எடுத்துகொண்டிருக்கும் (மரபு சார்ந்த ஓவிய பாணி) ஒரு கலையை அழியாமல் பாதுகாக்க என்னாலான முயற்சி. பங்களிப்பு. இந்த ஆராய்ச்சி என் ஓவிய பாணியை பின்தொடர நினைக்கும் இளைஞர்களுக்கு நிச்சயம் பயன்படும். நான் ஒரு சமூகப் போராளி. தமிழ் கலாசாரத்தை பாதிக்கும் எந்த சக்தியாக இருந்தாலும் எதிர்த்து போராடிக் கொண்டு இருக்கிறேன்.
சந்தியாராகம்..?
என்னை சில முறை மேடைகளிலும், நேரிலும் பாலுமகேந்திரா பார்த்திருக்கிறார். ஒரு முறை என்னை நேரில் வரச் சொல்லி அழைத்திருந்தார் . நான் அது சம்பிராயமான சந்திப்பாக இருக்கும் என்று தவிர்த்து வந்தேன். நான் சந்திக்கவில்லை என்பதை நண்பரிடம் சொல்லி பாலுமகேந்திரா வருத்தப்பட்டது தெரிந்து, நேரில் போய் பார்த்தேன். நிறைய விஷயங்கள் பேசினோம். பின்னர், சில நிழற்படங்கள் எடுத்தார். அவருக்கு நிழற்படம் எடுப்பது பிடித்தமான விஷயம் என்பதை அறிவேன், அதனால் ஏன் எதற்கு என்று கேட்கவில்லை. பிறகொருநாள் "நீங்க சந்தியாராகம் படத்தில் நடிக்கிறீங்க" என்று சொல்லிவிட்டார்.
"சந்தியாராகம்" (1989) படத்தில்
ஒரு முறை படப்பிடிப்பில் அர்ச்சனா சொல்லித்தான் இன்னொரு விஷயம் தெரிந்தது. ஒரு விழா முடிந்து பிலிம்சேம்பர் வளாகத்திலிருந்து நான் திரும்பிச்செல்லும்போது (முப்பத்து சொச்ச வயது இளைஞன், தாடி, ஜோல்னா பை, காட்டன் ஜிப்பா) வேகமாக நடந்துபோவதை பாலுமகேந்திரா, தன் காரில் இருந்து பார்த்துக்கொண்டே இருந்தாராம். அப்போதே இந்த வேடத்திற்கு என்னை பொருத்திப் பார்த்திருக்கிறார். (படத்திலும் நான் வேகமாக நடந்து செல்லும் காட்சி ஒன்று உண்டு.)
அவள் பெயர் தமிழரசி..
மீரா கதிரவன் தன் கதையில் வரும் ஒரு வேடத்திற்கு என்னை பொருத்திப் பார்த்திருக்கிறார். கதையை தெரிந்த அவரது உதவி இயக்குனர் ராஜேந்திரனும் நான் பொருத்தமாயிருப்பேன் என்றதும், எனக்கு கதையை படிக்கக் கொடுத்தார்கள். கதையை படித்ததும் எனக்கும் அந்த வேடம் மிகவும் பிடித்துப் போனது. இந்த கதைக்களம் இதுவரை யாரும் தொடாதது. கிட்டத்தட்ட எல்லோரும் மறந்து போன, அந்த வலி நிறைந்த கதைக்களத்தில் நடிப்பதில் நான் ஆர்வமாயிருந்தேன். இதில் நடிப்பதை என் கடமையாகவும் உணர்ந்தேன். இதுவரை நான் தலைமுடியை எடுத்ததே இல்லை. இதில் என் வயதுக்கு மீறிய வேடம் என்பதால் முன்தலையில் நிறைய முடியை சவரம் செய்து வயதான தோற்றத்தில் நடித்திருக்கிறேன்.
சந்தியாராகம் Vs அவள் பெயர் தமிழரசி
அன்று "சந்தியாராகம்" படத்தில் எனக்கு சின்ன வேடம் என்று நினைத்துதான் நடித்தேன். ரொம்பநாள் படப்பிடிப்பு நடந்த பிறகுதான் முழுக் கதையையும் படித்தேன். அதிர்ந்து போய் பாலுமகேந்திராவிடம் "இவ்வளவு நல்ல கதையாக இருக்கிறதே, இதில் நான் நடிக்கத்தான் வேண்டுமா..?" என்று கேட்டேன். இன்று அதே கேள்வியைத்தான் "அவள் பெயர் தமிழரசி" கதையை படித்த பின்னர் மீரா கதிரவனிடமும் கேட்டேன். இருவரிடம் இருந்தும் புன்னகை மட்டுமே பதிலாக வந்தது.
"அவள் பெயர் தமிழரசி" யில் ஒரு முக்கிய வேடம் ஏற்று நடிக்கிறேன். நான் அதை வேடம் என்று நினைக்கவில்லை. "நான்தான் அது" என்று நினைத்துதான் பதினெட்டு நாட்கள் வாழ்ந்தேன் (நான் சம்மந்தப்பட்ட படப்பிடிப்பு நடந்த நாட்கள் 18). நான் ஒரு வகையில் அதிஷ்டசாலி. நான் நடிக்கும் படங்களில் உடன் நடிப்பவர்கள் பிரமாதப்படுத்துகிறார்கள். "சந்தியாராகம்" படத்தில் அர்ச்சனா, சொக்கலிங்க பாகவதர். "அவள் பெயர் தமிழரசியில்" கூத்துப்பட்டறை ஜெயராவ், (என்னமா நடிக்கிறார் அந்த பையன்...) "என்னுயிர்தோழன்" ராமா, இவங்கல்லாம் நடிப்பில் அசத்தும்போது நம்மை அறியாமல் காட்சி சிறப்பாக வந்துவிடுகிறது. இவர்கள் யாரும் நடிகர் என்று நான் நினைக்கவே இல்லை. என் மகளாகவும் மகனாகவும் நினைத்துக்கொள்ளும்போது ஏன் நடிக்க வேண்டும்..?
சில விஷயங்கள் செய்ய, நான் சிரமப்பட்டபோது, மீரா கதிரவன் "அய்யா.. இந்த வசனத்திற்கு நீங்க இயல்பா என்ன reaction கொடுப்பீங்களோ அதை செய்யிங்க அவ்வளவுதான்" ன்னார். "இயல்பாக react செய்தால் போதுமே" என்றுதான் பாலு மகேந்திராவும் சொல்வார். Dubbing பேசும்போதும் Screen பார்த்து, உதட்டசைவைப் பார்த்து பேசவில்லை. மீண்டும் ஒருமுறை நடிப்பதாகவே உணர்ந்து காட்சிக்கு தேவையான ஏற்ற இறக்கம் மற்றும் உணர்வுகளுடன் பேசினேன். அதைத்தான் இயக்குனரும் விரும்பினார்.
நடிப்பது பிடித்திருக்கிறதா..?
ஏன் பிடிக்காமல்..? எல்லாமே கலை வடிவம்தானே..!!! இப்போது உள்ள சில தொழில்நுட்பங்கள் என்னை ஆச்சரியப்படுத்துகின்றன. நான் "ஒரு வேலை" செய்தால், தொழில்நுட்பம் எனது வேலையை பத்து மடங்கு செய்துவிடுதிறது. சக நடிகர்கள்தான் என்னோடு நடிச்ச நந்தகி, ஜெயராவ், ராமா எல்லோரும். அவர்களையே திரையில் ஒரு காட்சியில் (Dubbing-ல்) பார்க்கும்போது, எல்லோரும் ( நந்தகி, ஜெயராவ், ராமா) அங்கு அந்தந்த வேடங்களாத்தான் தெரியிறாங்க. என்னை நானே திரையில் பார்க்கும்போதும் அப்படித்தான் உணர்ந்தேன். அந்த வகையில் மீரா கதிரவன் நடிகர்களை கனக்கச்சிதமாக தேர்ந்தெடுத்திருக்கிறார். சரியான நடிகர்களை தேர்வு செய்ததில் தொடங்கி, இந்த படம் முழுக்க அவரது ஆளுமை. படப் பிடிப்புத்தளத்தில் எத்தனை எத்தனையோ பிரச்சனைகள், சவால்கள். எல்லாவற்றிற்கும் ஈடுகொடுத்து, சமாளித்து, ஒரு காட்சிக்கு (Scene) சகதொழிலாளர்களிடமும், நடிகர்களிடமும் என்ன வேண்டுமோ அதை மிகச் சரியாக கேட்டு வரவழைப்பதையும் கண்டு பிரமித்திருக்கிறேன்.
ஜெயராவ் & வீரசந்தானம் "அவள் பெயர் தமிழரசி"
பாலுமகேந்திரா படம் பார்த்துவிட்டராமே..?
ஆமாம். பாலு மகேந்திரா, "அவள் பெயர் தமிழரசி" படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. Im extremely happy for your role. சத்தியமா சொல்றேன்.. தமிழ் சினிமால இப்போதான் முதல் முறையா நம் தமிழ் மக்களின் உண்மையான கிராமத்தை, வாழ்கையை, முகங்களை, மனிதர்களை திரையில் பார்க்கிறேன்"- ன்னு சொன்னார். படம் பர்த்தவங்கல்லாம் "யார் சார் அவர்..? இப்படி நடிசிருக்காரு..!!!"ன்னு கேக்கறதா மீரா கதிரவனும் சொன்னார்.
இன்றைய தமிழ் சினிமா...
பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா படங்களுக்குப் பிறகு தங்கர் பச்சானின் "அழகி". நம் மக்களின் சந்தோசங்களை, சோகங்களை, பிரச்சனைகளை திரைப்படம் எடுக்கும் படைப்பளிகளையே நான் மதிக்கிறேன். அவர்களுடன்தான் இணைந்து வேலை செய்ய விரும்புகிறேன். "பசங்க"ன்னு ஒரு படம் வந்துது. அதை மக்கள் கொண்டாடினாங்களே. அந்த டைரக்டர் ஆசியாவிலேயே முதல் முறையா "தங்க யானை" பரிசு வாங்கி கிட்டு வந்தார்.. யாரும் கண்டுக்கலையே. சினிமாகாரங்க யாரவது அந்த பையனுக்கு (பசங்க இயக்குனர் பாண்டிராஜ்) பாராட்டு விழா எடுத்தாங்களா? இல்லையே..!!! விமர்சனம் ஒரு கலை. ஒரு சிலரைத் தவிர, இங்கு நல்ல கலை, இலக்கிய, சினிமா விமர்சகர்கள் இல்லை. கதை சுருக்கத்தை சொல்வதை மட்டுமே விமர்சனம் செய்வதாக நினைக்கிறார்கள். இதனால் சில நல்ல படங்களும் கவனிப்பாரற்று போகின்றன. நேர்மையான படைப்பாளி சொர்ந்துபோகிறான். அதுதான் சின்ன வருத்தம். நிறைய புதிய இளைஞர்கள் வருகிறார்கள். புதிய களங்களில் கதை சொல்கிறார்கள். சந்தேகமில்லாமல், இன்றைய தமிழ் சினிமா ஆரோக்கியமாக இருக்கிறது.
உங்கள் வாழ்வில் "அவள் பெயர் தமிழரசி"..?
"அவள் பெயர் தமிழரசி" கதை ஒரு நாவலாக வந்திருந்தால் சாகித்ய அகடமி விருது கிடைத்திருக்கும். அவ்வளவு வலுவான கதை. தமிழர்களின் கலாச்சாரம் பற்றிய ஆராய்ச்சி செய்தால், அவள் பெயர் தமிழரசி படத்தை தவிர்க்க முடியாது. அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த படமாக இருக்கும். என் சுயசரிதையை தொடர்ந்து எழுதிவருகிறேன். அதில் "அவள் பெயர் தமிழரசி"க்கு ஒரு முக்கிய இடம் உண்டு. எந்த காலத்திலும், ஒரு உண்மையான கலைஞன் தோற்றதாக சரித்திரம் இல்லை. சில நேரம் அவன் சிரமத்திற்கு உள்ளாகிறான். அவ்வளவுதான். ஆனால், ஒரு ஆலமரத்தின் வேர் மிகஆழமாக பதிந்திருப்பதை போல ஒரு படைப்பாளியின் வேர்கள் ஆழப்பொதிந்தவை. அப்படிப்பட்ட ஒரு கலைஞன் மீரா கதிரவன். காலம் அவன் மிகச்சிறந்த படைப்பாளி என்பதை காட்டும். மக்கள் எப்போதும் நல்ல சினிமாவுக்காக ஏங்குகிறார்கள். காத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட தரமான படங்கள் வரும்போது கொண்டாட தயாராக இருக்கிறார்கள். நடிச்சி முடிச்சிட்டு "அவள் பெயர் தமிழரசி" படம் பார்த்தப்போ அது "என் படமா"தெரியுது. நீங்க படம் பார்த்தா "உங்க கதையா"இருக்கும். ஒவ்வொருத்தருக்குமான விஷயம் இந்த படத்துல இருக்கு. மக்கள் கொண்டாட காத்திருக்கிறார்கள்.
இனி..
'சந்தியா ராகம்' (1989) படத்திற்குப் பிறகு நிறைய வேடங்கள் தேடி வந்தன. நல்ல கதைக்களம் இல்லாததால் எதிலும் நடிக்கவில்லை. "அவள் பெயர் தமிழரசி"க்குப் பிறகு, வ.கவுதமன் இயக்கும் "மகிழ்ச்சி" படத்தில் ஒரு வேடத்தில் நடிக்கிறேன். இப்போது தமிழ் சினிமா நல்ல திசையில் பயணிப்பதாக நினைக்கிறேன். இயல்பான யதார்த்தமான நல்ல படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன்.
மிகவும் நெகிழ்வானதொரு பதிவாக இது இருக்கிறது. நிழல்படத்தை பார்க்கும்போதே ஒரு நிறைவை தருகிறது.
ReplyDeleteஅன்புடன்,
லெனின்